Monday, December 22, 2008

வேலை வேண்டும்!

பட்டிக் காட்டை விட்டுவிட்டு
பட்டணத்தைத் தேடி வந்தேன்
பாடாய்ப்படுகிறது மனம்
பாழும் வேலையின்றி.

பலவற்றைக் கற்றறிந்தும்
பழமொழிகள் தெரிந்திருந்தும்
பாழும் வேலையின்றி
பரிதவிக்கிறது மனம்.

தேடிப் பார்க்கிறேன்
தினம்தோறும் வேலையை
தினசரிப் படிக்கிறேன்
தினப் பத்திரிக்கையை.

வேலையைத் தேடித்தேடி
வேதனைதான் மிச்சம்
அறிவைத் தேடித்தேடி
அமைதி இழந்ததுதான் மிச்சம்.

கேள்வி கேட்ப்பவனுக்கு
கேள்வி சாதாரணம்
பதில் அளிப்பவனுக்க்கு
படபடப்பே சதா மரணம்.

கேட்க்கின்ற கேள்வியெல்லாம்
படிக்காத பகுதியில்தான்
அளித்த பதில்களெல்லாம்
கேள்விக்கு எதிராகத்தான்.

செல்லுகின்ற இடமெல்லாம்
செல்லாதா காசுதான்
கொல்லுகின்ற கேள்விகளால்
குமுறுகிறது மனம்.

முடிந்த ஒன்றுக்காக
முழங்கால் போடுகிறது மனம்
முடியாத ஒன்றுக்காக
முழங்கை போடுகிறது மனம்.

இழந்த ஒன்றுக்காக
இளைப்பாறத் துடிக்கிறது மனம்
மறக்க நினைத்த ஒன்றை
நினைக்கத் துடிக்கிது மனம்.

பூத்த பூக்களையெல்லாம்
மாலையாகக் கோர்ப்பதில்லை
படித்தவர்களை எல்லாம்
வேலையில் அமர்த்துவதில்லை.

வாடியப் பூக்களைப்போல்
வாடிய முகங்கள் சிலபேர்
வாசனை இழந்த மலர்களைப்போல்
வேதனை சுமந்த பலபேர்.

காட்டை விற்றுவிட்டு
கணிப்பொறி கற்றறிந்தேன்
சாட்டையை விட்டுவிட்டு
சாப்ட்வேர் கற்றறிந்தேன்.

கனவுக் கோட்டையிலே
கொடிகட்டிப் பறந்தேன்
கம்ப்யூட்டர் துறையிலே
கோட்டை விட்டுவிட்டேன்.

மண்வெட்டியோடு உறவாடி
மண்ணோடு விளையாடிஇருந்தால்
மனக் கவலை இல்லை
மாண்டு போகும் வரை.

பேனாவோடு விளையாடி
தானாக வந்தது வினை
தேனாக நினைத்த கல்வி
தேளாகக் கொட்டுகிறது.

மாதச் சம்பளம் கிடைக்குமென்று
மனக்கோட்டை கட்டிஇருந்தேன்
தினச் சம்பளம்தான் எனக்கென்று
தெய்வம் தீர்மானித்துவிட்டது.

திறமையை இழக்கிறேன்
தினம் தினம் தோல்வியால்
தடுமாறி நிற்கிறேன்
தடம்புரண்ட பாதையில்.

வட்டிக்குப் பணம் வாங்கி
வாழ்க்கைநடத்தும் நிலைமாறி
நிலையான சுகம் காணும்
தலையாய வரம் வேண்டும்.

கனவுத் தொழிற்சாலை
காணாமல் போகுமுன்னே
கடவுளே நீ இருந்தால்
கருணை காட்டிடு வேலைக்கு.

என்றும் நட்புடன்....ராஜா பழனிசாமி

No comments:

Post a Comment