Thursday, April 20, 2017

அம்மா!

அம்மா!

என் இதயத்தைப் பறித்து
எரியும் கொள்ளியில் இட்டாலும்
அது வெடித்து சிதறும்போது
"அம்மா" என்றழைத்தே மடியும்!

உனக்காக

ஒருமுறை தான் பிறப்பு வரும்
உனக்காக பிறந்து விட்டேன்!
ஒரு நொடியே உறங்கினாலும்
உன் மடிமீது துயில வேண்டும்
ஒருமுறை தான் இறப்பு வரும்
அதுவும் உன் மடிமீதே நிகழ வேண்டும்!



புகையே பகை!


இரு விரல்கள் காயம்பட்டு
இரு இதழ்கள் ஊணப்பட்டு
உட்கொண்ட புகையினால் 
உடலுக்குப் பகையாகி 
புற்று நோய்க்கு இரையாகி 
உயிர் துறக்கும் நிலை 
                         இனியும் வேண்டுமோ ? 

Thursday, April 10, 2014

அன்பு மகன்! (நண்பன் மகேந்திரன் கேட்டதற்காக )


தவமாய் தவமிருந்து
தவப் புதல்வனாய் நீ  வந்தாய்! - எனை
தவிக்க விட்டுவிட்டு -எங்கு
தடம் மாறிச்  சென்றாய் !
குழந்தை பருவத்தில் நீ செய்த
குறும்பு அத்தனையும் தேனாகும்
விடலைப் பருவத்தில் நீ செய்த
வீம்பு அத்தனையும் எனக்குப் பாலாகும்!
தாலாட்டுப் பாடி என்
தங்கமே உனை தூங்க வைத்திருப்பேன் - இன்று எனை
ஒப்பாரி பாடவைத்து உன்னுயிரை - எங்கே
ஒளித்து வைத்தாய்!
கருவிலே இருக்கும்போது
களிப்புற்று இருந்தேனடா !
இடுப்பிலே இருக்கும்போது
இன்பத்திலே திளைத்தேனடா !
கைவிரல் பிடித்து நடக்கும்போது
கவலையற்று போனேனடா - இன்று
கைவிரல்கள் கட்டப்பட்டு நீ
கவலையற்று உறங்குவது ஏனடா !

தலை மகனாய் நீ இருந்து - என்
தலை காப்பாய் என்றிருந்தேன் - இந்த
தாய்க்கு தலை மகனே எனை
தவிக்கவிட்டு எங்கே சென்றாய்!
வாழவேண்டிய வயதினிலே
வாழ்க்கை துணையைவிட்டு சென்றாய்
மார்மீது தவழவேண்டிய மகளை
மண்மீது ஏன் அழவிட்டு சென்றாய்!
அரும்பாடுபட்டு உன்னை
ஆளாக்கிய என் உள்ளம்
ஆறாத  சோகம் கொண்டு
அழுதே துடிக்கிறது !
அம்மா என்றழைத்த - என்
அன்பு மகன் குரல் எங்கே?
அளவில்லா அன்பு கொண்ட என்
அருமை மகன் உயிர் எங்கே?
கொல்லி வைக்க பிள்ளை
நீ இல்லை என - என் இதயம்
சொல்லி சொல்லி அழுகுதடா !
வயிறு நிரம்ப நீ சோறுன்ன - நான்
சுவையாய் சமைத்ததென்ன - இன்று
வாய்க்கு அரிசி போடச்சொல்லி என்
உதிரத்தை உறையச் செய்ததென்ன!
எமன் காண்பித்த பாதையிலே
எனை நீ முந்தி சென்றதென்ன
எனை சுமக்கும் பாடையிலே - நீ
தனை மறந்து உறங்குவதென்ன!
என்ன சொல்லி அழுதால்
என் செல்லமே நீ வருவாய்
அம்மா... அழுது புலம்புகின்றேன்
அன்பு மகனே ஓடி வா!
மறு ஜென்மம் எடுத்தாலும் - நான்
மங்கையாக பிறக்க வேண்டும் - என்
மகனே நீதான்  எனக்கு
மழலையாகப் பிறக்க வேண்டும் !
உனக்கு முன்பே என்
உயிர் பிரிய வேண்டும்
உன் இருவிழி கண்ணீர் - என்
உடலை நனைக்க வேண்டும்.
வாய்க்கு அரிசி போடும்போதும் - உனைநான் 
வாழ்த்த வேண்டும் -உன்
புறங்கை மணல் தள்ள என் முகம்
புன்முறுவலோடு அதை ஏற்றுக்கொள்ளும்.!
 

என்றும் நட்புடன்...
ராஜா பழனிசாமி

நல்லரசைத் தந்திடுவீர் (2014 அரசியல் களம்)

நெஞ்சு பொறுக்குதில்லை

நிகழ்கின்ற நிகழ்ச்சியாவும்
நஞ்சு மிகுந்த நாட்டினிலே
கெஞ்சி என்ன பயன்?

பஞ்சு இன்றி
பாவம்  மேனி மறைக்க ஆடைஇல்லை
கஞ்சி இன்றி
நெஞ்சு வற்றிப்போற நிலை  உண்டு.

நாட்டை சீர்திருத்த
நல்லவர் இங்குயாருண்டு?
சுடுகாட்டையும் சுருட்டிடும்
சூனியர் இங்குண்டு?

கூட்டணி சேர்ந்திடத்தான்
கூட்டு முயற்சி நடக்கிறது
ஓட்டுப் போடும் மக்களுக்கு
வேட்டுவைக்க கூட்டணி காத்திருக்கு.

பல ஆண்டுகாலம் ஆண்டும்
பலனில்லை யார்க்கும்
பல வாக்குறுதி யாவும்
பழிக்கவில்லை போலும்.

பட்டினியால் வாடும்
பலகோடி மக்களுக்கு
பலனளிக்க இந்த
பாரதத்தில் யாருமுண்டோ?

கோடிகளை சுருட்டிடத்தான் 
கோவணத்துணியையும் அவிழ்த்திடுவர்
மாடிகளை கட்டிடவே
மல்லுக்கட்டி போட்டி போட்டிடுவர்.

சட்டம் ஒழுங்கு எல்லாம்
சந்தியெல்லாம் சிரிக்குது
கெட்டபெயர் ஒன்று மட்டும்
பட்டமாய் பறக்குது

கற்ப்பழிப்பு சம்பவம்
கரைபுரண்டு ஓடுது
கன்னியர்க்கு காவல் என்பது
கட்டாயம் ஆகுது.
சங்கிலி பறிப்பு சம்பவம்
சகஜமாகிப் போனது
தாலிபோடும் கழுத்தைசுற்றி முள்
வேலி போடச்சொல்லுது.
ஆற்று மணலை  அள்ளி அள்ளி
காற்றோடிப் போனது காவிரி
சேற்று மிதந்த நிலம்தன்னில்
செங்கல் மலை உயர்ந்ததென்ன?
விலைவாசி உயர்வுக்கு
விடிவு உண்டோ?
விலையில்லா பொருட்களுக்கு
தடை உண்டோ?
ஓட்டுரிமை இங்கே
நோட்டுரிமை ஆகுது
சீட்டுக்கட்டுபோல ஒட்டு
சிதறிக் கிடக்குது.
வைரத்தைத் தீட்டிடவே
வைரம் வேண்டும்
நம்மை மாற்றிடவே
நாமே வேண்டும்.
தெளிந்த சிந்தனையோடு
தேர்ந்தெடுப்பீர் நல்லவரை
நோட்டுக்காக ஓட்டை விற்காதிர்  - உயிர்
விட்டுப் போகும்வரை
படித்தவரில் நல்லவரை
பதவியிலே அமரச்செய்வீர்
கறைபடிந்த கைகளுக்கு
கடிவாளம் போட்டிடுவீர்.
ஏழைமக்கள் வாழ்ந்திடவே
ஏணியாய் மாறிடுவீர்
வேலையில்லா பட்டதாரி இல்லையென
நிலை உருவாக்கிடுவீர்.
துள்ளும் இளம் உள்ளங்களுக்கு
வாய்ப்புத் தூண்டில் இடுவீர்
வல்லரசு ஆக்கிடவே
நல்லரசைத் தந்திடுவீர்


 என்றும் நட்புடன் ...
ராஜா பழனிசாமி



அம்மா நீ எங்கே? (நண்பன் ஹரிஷ் கேட்டதற்காக )

ஓர் அணுவாய் உன் வயிற்றில் கேட்டதற்காக 
நான் கருவானேன்
ஓர் ஆண் மகனாய் இன்று
உருவானேன் !
எனை பாலூட்டி வளர்த்தாய் -இன்று
எங்கு பறந்து சென்றாய்!
அன்பையே காட்டி வளர்த்த அன்னை -இன்று
அடைக்கலம்  எங்கு புகுந்தாய்!
பசி என்ற சொல்லுக்கு அன்று
பொருளில்லை எனக்கு
ருசி என்ற சொல்லுக்கு - இன்று
பொருளில்லை எனக்கு!
உன் மடிமீது தவழ்ந்த நாளெல்லாம்
நான் உயிர்  வாழ்ந்த நாட்கள் என்பேன்
எனை நீ பிரிந்த நிமிடம் முதல்
எனை நான் நடமாடும் பிணம் என்பேன்!
 தலை மீது பிறர் கை
 தடுமாறி பட்டாலும்
தாய் இல்லாதவன் நானா என்று
தனை மறந்து கோபம் கொண்டேன் அன்று!
என் தலையில் நானே அடித்துக்கொண்டு புலம்புகிறேனின்று  
எனைவிட்டு நீ எங்கு சென்றாயென்று!
எப்போதும் உன் நினைவில் நான் வாடி
எட்டுதிசை எங்கும் தேடி அலைகின்றேன் !
மங்கள இசை முழங்க
மண மேடை நான் ஏற
மணமகன் என்ற  மகுடம் சூடிடவே - இந்த
மகனை ஈன்றெடுத்த என் அன்னை நீ எங்கே!
மாண்டுதான் நீ போனாலும்
மகன் நான் உன் நினைவில் வாழுகிறேன்
மகளாய் நீ வந்து பிறந்து என்
மனக்குறையை தீர்ப்பாயோ!
காடுதான் நீ செல்ல உனக்கு
கால அவகாசம் இல்லையோ! அடக்
கடவுளே உனக்கும்தான்
கருணை நெஞ்சம் இல்லையோ?
பாதம் தொட்டு வணங்கிடத்தான்
பார்வைதன்னை செலுத்துகிறேன்
ஆளில்லை என்றாலும் எனை நீ
ஆசிர்வதிப்பாய் என்று நம்புகிறேன்!
எப்பிறவி எடுத்தாலும்
என் தாய் நீயாக வேண்டும்
என்று நான் இன்னுயிர் நீத்தாலும்
என் ஆத்மா  உன்னிடத்தில் சேர வேண்டும்.


என்றும் நட்புடன்...
ராஜா பழனிசாமி 

 

என் தோழிக்கு பிறந்தநாள்!

வட்ட நிலவே நீ என்ன அழகு ?
என் தோழியின் முகம் அழகினும்  அழகு.
வாசம் கொண்ட மலரே நீ என்ன அழகு ?
என் தோழியின் பாசம் உனைவிட மெலிது .

அலை கொண்ட கடலே நீ என்ன அழகு?
அவள் அன்பு உனைக்காட்டிலும் பெரிது.
கலை கொண்ட சிலையே நீ என்ன அழகு?
கள்ளமில்லா அவள் உள்ளம் உனைவிட அழகு.

புன்னகை சிந்திடும் - இந்த
பூ முகத்துக்கு பிறந்தநாள்!-  நல்
அன்பை பொழிந்திடும்
அன்பு தங்கைக்கு இன்றே சிறந்த நாள்!

பொறுமை என்ற சொல்லுக்கு 
புகலிடமே அவள் தான்!
பொறாமை என்ற சொல்லுக்கு
பொருளே இல்லை என்பதும் அவள் மட்டும் தான்!

எனக்குப் பிடித்ததும்
என் தோழி அவள்தான்
என்றும் எனக்குப் பிடிக்கும்
என் தோழி குணம் தான்!

காலம் நூறாண்டு அவள் வாழனும்
கவிதை நூறு அவள் பற்றி எழுதணும்
கல்லறைக்கு நான் போனபின்பும் - இந்த
கவிதையை செல் அரிக்காமல் அவள் காக்கணும் .

என்றும் நட்புடன்...ராஜா பழனிசாமி