Thursday, April 10, 2014

அன்பு மகன்! (நண்பன் மகேந்திரன் கேட்டதற்காக )


தவமாய் தவமிருந்து
தவப் புதல்வனாய் நீ  வந்தாய்! - எனை
தவிக்க விட்டுவிட்டு -எங்கு
தடம் மாறிச்  சென்றாய் !
குழந்தை பருவத்தில் நீ செய்த
குறும்பு அத்தனையும் தேனாகும்
விடலைப் பருவத்தில் நீ செய்த
வீம்பு அத்தனையும் எனக்குப் பாலாகும்!
தாலாட்டுப் பாடி என்
தங்கமே உனை தூங்க வைத்திருப்பேன் - இன்று எனை
ஒப்பாரி பாடவைத்து உன்னுயிரை - எங்கே
ஒளித்து வைத்தாய்!
கருவிலே இருக்கும்போது
களிப்புற்று இருந்தேனடா !
இடுப்பிலே இருக்கும்போது
இன்பத்திலே திளைத்தேனடா !
கைவிரல் பிடித்து நடக்கும்போது
கவலையற்று போனேனடா - இன்று
கைவிரல்கள் கட்டப்பட்டு நீ
கவலையற்று உறங்குவது ஏனடா !

தலை மகனாய் நீ இருந்து - என்
தலை காப்பாய் என்றிருந்தேன் - இந்த
தாய்க்கு தலை மகனே எனை
தவிக்கவிட்டு எங்கே சென்றாய்!
வாழவேண்டிய வயதினிலே
வாழ்க்கை துணையைவிட்டு சென்றாய்
மார்மீது தவழவேண்டிய மகளை
மண்மீது ஏன் அழவிட்டு சென்றாய்!
அரும்பாடுபட்டு உன்னை
ஆளாக்கிய என் உள்ளம்
ஆறாத  சோகம் கொண்டு
அழுதே துடிக்கிறது !
அம்மா என்றழைத்த - என்
அன்பு மகன் குரல் எங்கே?
அளவில்லா அன்பு கொண்ட என்
அருமை மகன் உயிர் எங்கே?
கொல்லி வைக்க பிள்ளை
நீ இல்லை என - என் இதயம்
சொல்லி சொல்லி அழுகுதடா !
வயிறு நிரம்ப நீ சோறுன்ன - நான்
சுவையாய் சமைத்ததென்ன - இன்று
வாய்க்கு அரிசி போடச்சொல்லி என்
உதிரத்தை உறையச் செய்ததென்ன!
எமன் காண்பித்த பாதையிலே
எனை நீ முந்தி சென்றதென்ன
எனை சுமக்கும் பாடையிலே - நீ
தனை மறந்து உறங்குவதென்ன!
என்ன சொல்லி அழுதால்
என் செல்லமே நீ வருவாய்
அம்மா... அழுது புலம்புகின்றேன்
அன்பு மகனே ஓடி வா!
மறு ஜென்மம் எடுத்தாலும் - நான்
மங்கையாக பிறக்க வேண்டும் - என்
மகனே நீதான்  எனக்கு
மழலையாகப் பிறக்க வேண்டும் !
உனக்கு முன்பே என்
உயிர் பிரிய வேண்டும்
உன் இருவிழி கண்ணீர் - என்
உடலை நனைக்க வேண்டும்.
வாய்க்கு அரிசி போடும்போதும் - உனைநான் 
வாழ்த்த வேண்டும் -உன்
புறங்கை மணல் தள்ள என் முகம்
புன்முறுவலோடு அதை ஏற்றுக்கொள்ளும்.!
 

என்றும் நட்புடன்...
ராஜா பழனிசாமி

No comments:

Post a Comment