Thursday, April 10, 2014

அம்மா நீ எங்கே? (நண்பன் ஹரிஷ் கேட்டதற்காக )

ஓர் அணுவாய் உன் வயிற்றில் கேட்டதற்காக 
நான் கருவானேன்
ஓர் ஆண் மகனாய் இன்று
உருவானேன் !
எனை பாலூட்டி வளர்த்தாய் -இன்று
எங்கு பறந்து சென்றாய்!
அன்பையே காட்டி வளர்த்த அன்னை -இன்று
அடைக்கலம்  எங்கு புகுந்தாய்!
பசி என்ற சொல்லுக்கு அன்று
பொருளில்லை எனக்கு
ருசி என்ற சொல்லுக்கு - இன்று
பொருளில்லை எனக்கு!
உன் மடிமீது தவழ்ந்த நாளெல்லாம்
நான் உயிர்  வாழ்ந்த நாட்கள் என்பேன்
எனை நீ பிரிந்த நிமிடம் முதல்
எனை நான் நடமாடும் பிணம் என்பேன்!
 தலை மீது பிறர் கை
 தடுமாறி பட்டாலும்
தாய் இல்லாதவன் நானா என்று
தனை மறந்து கோபம் கொண்டேன் அன்று!
என் தலையில் நானே அடித்துக்கொண்டு புலம்புகிறேனின்று  
எனைவிட்டு நீ எங்கு சென்றாயென்று!
எப்போதும் உன் நினைவில் நான் வாடி
எட்டுதிசை எங்கும் தேடி அலைகின்றேன் !
மங்கள இசை முழங்க
மண மேடை நான் ஏற
மணமகன் என்ற  மகுடம் சூடிடவே - இந்த
மகனை ஈன்றெடுத்த என் அன்னை நீ எங்கே!
மாண்டுதான் நீ போனாலும்
மகன் நான் உன் நினைவில் வாழுகிறேன்
மகளாய் நீ வந்து பிறந்து என்
மனக்குறையை தீர்ப்பாயோ!
காடுதான் நீ செல்ல உனக்கு
கால அவகாசம் இல்லையோ! அடக்
கடவுளே உனக்கும்தான்
கருணை நெஞ்சம் இல்லையோ?
பாதம் தொட்டு வணங்கிடத்தான்
பார்வைதன்னை செலுத்துகிறேன்
ஆளில்லை என்றாலும் எனை நீ
ஆசிர்வதிப்பாய் என்று நம்புகிறேன்!
எப்பிறவி எடுத்தாலும்
என் தாய் நீயாக வேண்டும்
என்று நான் இன்னுயிர் நீத்தாலும்
என் ஆத்மா  உன்னிடத்தில் சேர வேண்டும்.


என்றும் நட்புடன்...
ராஜா பழனிசாமி 

 

No comments:

Post a Comment